Sunday, October 11, 2020

Overtake

ஓவர் டேக்

நான் என் புல்லட் மிர்ரரில் மீண்டும் பார்த்தேன்
'அந்த பிளாட்டினா வண்டி காரன் என்னை முந்தாமல் விட மாட்டான் போலவே.. ஓட்டை வண்டியை வச்சிக்கிட்டு எவ்ளோ வேகமா பின்னாடியே வரான்...
காட்றேன் ..டா.. புல்லட் 350 cc பவர் என்னனு காட்றேன் .என்னையே முந்த பாக்கரியா நீயெல்லாம் என்ன ஓவர் டேக் பண்ணா அது என் ஒன்றரை  லட்ச ரூபாய் வண்டிக்கே கேவலம்.

என் மேல் ஈகோ சவாரி செய்ய.. புல்லட் மேல் நான் பேய் சவாரி செய்தேன் ஆக்சிலேட்டர் காதை பிடித்து அதன் எல்லை வரை திருகி 350 cc யை கதற வைத்தேன்
டுபு .டுபு..டுபு.... புல்லட் ஹை பிட்சில் ட்ரம் வாசிக்க.. மீண்டும் கண்ணாடியில் பார்த்தவனுக்கு அதிர்ச்சி. அந்த பிளாட்டினா மர்ம மனிதன் கடும் பிரயத்தன பட்டு என்னை இன்னும் பின் தொடர்ந்து கொண்டே இருந்தான்...

இந்த கண்ணாமூச்சி அடுத்த 20 நிமிடம் தொடர நான் சோர்ந்து போய் 'முந்தி போய் தொலையட்டும் போ.நாய்க்கு என்ன அவசரமோ... ' என வேகம் குறைத்தேன் பிளாட்டினா ஓவர் டேக் பண்ண வழி விட்டேன்..

கொஞ்சம் கொஞ்சமாய் பக்கம் நெருங்கிய பிளாட்டினா ஆசாமி..

"சார் சார்... எவ்ளோ நேரமா சார் துரத்தி வரது... ஸ்டேண்ட் எடுக்காம ஓட்டிட்டு இருக்கீங்க பாருங்க ஸ்டேண்ட் எடுங்க சார்" என்றான்..

என் 350 cc பவர் கொண்ட ஈகோ குடை சாய்ந்தது...