Search this Blog

Saturday, July 25, 2020

தவறவிட்ட செல்போன்

கடைக்கு வந்து என் சட்டைப்பையில்  பார்த்தேன். என் செல்போன் காணாமல் போயிருந்தது.

நானே செல்போன் விற்பனை , பழுது நீக்கும் கடை தான் வைத்திருக்கிறேன். 

ஆனால் இந்த செல்போனை தவறவிட்டது மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. சுமார் 25 ஆயிரம் மதிப்பு.எப்படியோ கீழே விழுந்திருக்கிறது. 

வேறு ஒரு போனில் இருந்து ,அந்த நம்பருக்கு கால் செய்தேன் முதலில் பதில் இல்லை.  மூன்றாம் முறை 

எடுக்கப்பட்டது .

'' ஹலோ '' என்றது ஒரு சிறுவனின் குரல்.

'' இந்த போன் என்னோடது , மிஸ் பண்ணிட்டேன். எங்க இருக்கீங்கனு சொல்லுங்க. நானே வந்து வாங்கிக்கறேன். ''

'' கே.ஜெ ஸ்டோர் பக்கத்துல வந்துட்டு இருந்தேன் அங்கிள் , ரோட்ல ஒரு போன் ரிங் ஆயிட்டு இருந்துச்சு. அதான் எடுத்து பேசறேன் ''

''அங்கேயே இருங்க 2 நிமிசத்துல வந்துடறேன் ''

நான் உடனே கிளம்பி  கே.ஜெ ஸ்டோர் அருகில் சென்றேன். சிறுவன் நின்று கொண்டிருந்தேன். கொரோனா காலம் என்பதால் மாஸ்க் அணிந்திருந்தான். நானும் அணிந்து இருந்தேன்.

'' நான் தான் தம்பி , போன் மிஸ் பண்ணது''

'' இந்தாங்க அங்கிள் ''

'' உன் பேர் என்ன தம்பி ''

'' இளங்கோ ''

'' என்ன க்ளாஸ் படிக்கிற தம்பி ?''

''செவென்த் போகணும் அங்கிள் ''

'' எந்த ஸ்கூல் ''

சொன்னான்.

'' தேங்க்ஸ்பா , போன் எடுத்து ஆஃப் பண்ணி வச்சுக்காம , என்கிட்ட கொடுத்தியே, பெரிய விஷயம் பா ''

'' போன் தொலைச்சவங்க பாவம் தானே,  போன் இல்லமா எவ்ளோ கஷ்டப்படுவாங்கனு தான் நினைச்சேன் அங்கிள்.

போனை நானே எடுத்து வச்சிக்கணும்னு நான் நினைக்கவே இல்லை ''

நான் அவனிடம் 500 ருபாய் கொடுத்தேன்.

''காசெல்லாம்  வேண்டாம் அங்கிள். ''

''என்னோட சந்தோஷத்துக்காக வாங்கிக்க இளங்கோ. அதுக்கு அப்புறம்  இந்த பணத்துல என்ன வேணா பண்ணிக்கோ ''

அவன் சட்டைப்பையில்    வைத்துவிட்டு கிளம்பி கடைக்கு வந்தேன் . நான் விற்பனையும்,  உதவியாளன் ராகுல்  ரிப்பேரும் கவனிப்போம். 

ஒரு மணிக்கு நானும் , இரண்டு மணிக்கு மேல் அவனும் உணவு இடைவேளைக்கு செல்வது வழக்கம்.

 நான் வீட்டிற்கு சென்று இரண்டு மணிக்கு திரும்ப வந்தபோது கடைவாசலில் அந்த சிறுவன் ,இளங்கோ  நின்றிருந்தான்.

ராகுலும் இளங்கோவும் பேசிக்கொண்டு இருந்தார்கள்.

'' இந்த போன்ல டிஸ்பிளே  உடைஞ்சு இருக்கு. மதர் போர்டும் போச்சு , இதை ரிப்பேர் பண்றது வேஸ்ட் . 4000 ருபாய் ஆகும். 4000 ரூபாய்க்கு இதே மாடல் புதுபோன்  கிடைக்கும்'' 

'' 500 ரூபாய்க்கு இதை ரிப்பேர் பண்ண முடியாதா ?''

'' ம்ம்ஹூம் முடியாது ''

நான் கடைக்கு உள்ளே நுழையும்போது இளங்கோ சோகமாக வெளியேறினான். நான் கூப்பிட்டேன்.

'' என்ன தம்பி , போன் காட்டு ''

 கொடுத்தான்.

''ராகுல் , இதுல எல்லா பார்ட்ஸும் மாத்திடு''

'' பத்து நிமிஷம் வெய்ட் பண்ணு தம்பி ''

''ஓகே அங்கிள் ''

''இந்த போன் யாரோடது , எப்படி உடைஞ்சிது '' 

'' அப்பாவோட போன். ஒரு நாள் தெரியாம கீழ போட்டுட்டாரு  ''

''  உங்க அப்பா என்ன பண்றாரு''

'' சினிமா தியேட்டர்ல வேலை பண்ணாரு. இப்போ தியேட்டர் எல்லாம் மூடிட்டாங்க. இப்போ 3 மாசமா வீட்ல தான்  இருக்காரு. ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண போன் வாங்கிதங்கப்பானு   கேட்டேன்.  காசில்லைனு சொல்லிட்டாரு.  இப்போ தான்  உடைஞ்ச போன் ரிப்பேர் பண்ண பணம் கிடைச்சுது  ''

அவனுடன் மேலும் பேசிக்கொண்டு இருந்தேன். ராகுல் போனை தயார் செய்து முடித்து இருந்தான்.

இளங்கோவிடம் கொடுத்தேன். சந்தோசமாக போனை வாங்கிப்பார்த்தான்.

'' எவ்வளவு ஆச்சு ,அங்கிள்''

'' இப்போ உன்கிட்ட எவ்வளவு இருக்கு'' 

''500 ருபாய் தான் இருக்கு , அதுவும் நீங்க கொடுத்தது தான் ''

அவனிடம் 500 ருபாய் வாங்கிக்கொண்டுமீதம் 400 ருபாய் கொடுத்தேன் .  

''100 ருபாய் எடுத்துக்கிட்டேன்பா  , போயிட்டுவா''

'' அங்கிள் , காலைல நான் உங்க கிட்ட போன் திரும்ப கொடுத்ததால தானே எனக்கு கம்மியா காசு வாங்கி ரிப்பேர் பண்ணீங்க '' என்றான் .

'' அதுமட்டும் இல்லப்பா , உங்க க்ளாஸ்ல பிரபு னு ஒரு பையன் படிக்கறானா ?''

'' ஆமா அங்கிள் ''

'' அவங்க அப்பா தான் நான் . காலைல நீ படிக்கிற ஸ்கூல் பேர் சொன்னேல, நான் சாப்பிட வீட்டுக்கு போனப்ப , பிரபு கிட்ட இளங்கோ பத்தி தெரியுமா னு கேட்டேன்.

தெரியும்பா ,அவன் தான் எப்பவும் க்ளாஸ்ல ஃபர்ஸ்ட்  மார்க்.  ஆனா ஆன்லைன் க்ளாஸ் ஒரு நாள் கூட அவன் அட்டென்ட் பண்ணவே இல்ல . என்னாச்சுன்னு தெரியலனு சொன்னான் .

நீ ஆன்லைன் க்ளாஸ் அட்டென்ட் பண்ண முடியாம எவ்வளவு மனசு கஷ்டப்படுவேன்னு தெரியும் இளங்கோ. அதன் உனக்கு கம்மி விலைல ரிப்பேர் பண்ணி கொடுத்தேன். நல்லாப் படிக்கணும்   ''

''ரொம்ப தேங்க்ஸ் அங்கிள்'' என்று சொல்லிவிட்டு தன் சட்டையில் கண்ணீரை துடைத்துக்கொண்டான்.

அந்த கண்ணீருக்கு பின்னால்  சோகமோ , மகிழ்ச்சியோ , அல்லது இரண்டுமே இருக்கக்கூடும் .

[முற்றும் ]

#எழுதியவர் : தமிழ்ச்செல்வன்.

No comments:

Post a Comment

Note :

Most of the contents are published here were collected through email and Internet. I bear no responsibility for these contents.