Friday, August 14, 2020

பழமொழிகளும் அதன் உண்மை விளக்கங்களும்...

1. ஆயிரம் முறை பொய் சொல்லி கூட ஒரு கல்யாணம் பண்ணலாம்.

விளக்கம்: ஆயிரம் பொய் சொல்லியாவது ஒரு கல்யாணம் பண்ணலாம் என்பதல்ல. ஆயிரம் முறை போய் சொல்லி ஒரு கல்யாணம் பண்ணலாம்என்பதாகும். அதாவது, நம் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருடன் நாம் பகைமை கொண்டு நம் வீட்டில் நடக்கும் கல்யாணம் போன்ற சுபதினங்களில் நாம் அழைக்காமல் இருப்போம். ஆனால், அவர்களை விட்டுவிடாமல் ஆயிரம் முறை போய் சொல்லியாவது அவர்களை அழைத்து நம் வீட்டில் திருமணம் நடத்தவேண்டும் என்பதாகும். அப்படி நல்ல நோக்கத்திற்காக சொல்லப்பட்ட பழமொழிதான் பின்னாளில் மருவி அல்லது மாறி இப்போது உள்ளதுபோல ஆகிவிட்டது.

2. அடியாத மாடு படியாது.

விளக்கம்: உண்மை பொருள் என்னவென்றால் மாட்டின் கால்களுக்கு லாடம் அடித்தால் தான் அதனால் கடுமையான வேலைகளை (உழுதல் போன்ற ) செய்ய முடியும் என்பது தான்.

3. கல் தோன்றா மன் தோன்றாக் காலத்தே

வாளோடு முன் தோன்றிய மூத்த குடி

விளக்கம்: (கல்) கல்வி அறிவு தோன்றாத (மன்) மன்னராட்சி ஏற்படுவதற்கு முன்பாகவே, (வாளோடு) வீரத்தோடு தோன்றிய முதல் இனம் தமிழினம் என்பது இன்று கல் தோன்றா மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன் தோன்றிய மூத்தகுடி என்று, கல்லும் மண்ணும் தோன்றாத காலத்திலேயே (பூமி உருவாவதற்கு முன்பே) தமிழினம் உருவாகி விட்டதாக அர்த்தப் படுத்தப் படுகின்றது.

4. ஆறிலும் சாவு நூறிலும் சாவு

விளக்கம்: மகாபாரதத்தில் கர்ணனின் தாய் குந்திதேவி பாண்டவர்களுடன் கர்ணனை சேர்ந்து கொள்ளுமாறு கேட்கின்றாள். அப்போது தான் பாண்டவர்களுடன் சேர்ந்து ஆறாவதாக வந்தாலும் தனக்கு சாவு நிச்சயம். கொளரவர்கள் நூறு பேருடன் சேர்ந்திருந்தாலும் சாவு நிச்சயம். எனவே செய்நன்றிக் கடனுக்காக தான் கௌரவர்களுடனேயே இருந்து விடப் போவதாக கர்ணன் கூறுகின்றான். அதாவது ஐந்து பேருடன் ஆறாவதாகச் சேர்ந்தாலும் சாவுதான். நூறு பேர் கௌரவர்களுடன் இருந்தாலும் சாவுதான் என்பதுதான் அது. ஆனால் ஆறிலும் சாவு நூறிலும் சாவு என்பது இன்று வயதைக் குறிப்பதாக அர்த்தப்பட்டு விட்டது.

5. உண்டி சுருங்குதல் பெண்டிர்க்கு அழகு.

விளக்கம்: உண்டி என்பது சாப்பாடு. சாப்பாடு செய்வதற்கான நேரம் அதிகமாகும் பட்சத்தில, பெண்கள் சமையலறையிலேயே முடங்கி விடுகிறார்கள். இதனால் இவர்கள் மற்றைய விடயங்களிலிருந்து பின்னுக்குப் போய் விடுகிறார்கள். இந்த நிலை மாறுவதற்கு அவர்கள் சுவையான சமையலை குறுகிய நேரத்துக்குள் செய்யக் கற்றுக் கொள்ள வேண்டும். இதுவே பெண்களுக்கு அழகு.


 
6. நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்.

விளக்கம்: பண்டைக்காலத்தில் அற்புத சிற்பங்கள் வடிக்கப் பட்டன. மாமல்லபுரம், தஞ்சை, காஞ்சி சிற்பங்கள் இதற்கு எடுத்துக் காட்டாக விளங்கின. இங்கே ஒரு சிற்பி நாயின் உருவத்தை கல்லில் சிற்பமாக வடித்திருந்தான். அந்த சிற்பத்தை ஒருவன் மிகவும் ரசித்தான். அந்த சுவைஞனைச் சிற்பி கேட்டான் "என் சிற்பம் எப்படி? என்று. அதற்குச் சுவைஞன் சொன்ன பதில் 'நாயைக் கண்டால் கல்லைக் காணோம்; கல்லைக் கண்டால் நாயைக் காணோம்' என்பதாக இருந்தது. அதாவது அதில் நாயைப் பார்த்தால் கல் தெரியவில்லை. கல்லைப் பார்த்தால் நாய் தெரியவில்லை.

7. பசி வந்திட பத்தும் பறந்து போகும்

விளக்கம்: அறிவுடைமை, இன்சொல், ஈகை, தவம், காதல், தானம், தொழில், கல்வி, குலப்பெருமை, மானம் ஆகிய பத்து குணங்களும் பசி என்று வந்து விட்டால் பறந்து போகும் என்பது உண்மை.

8. போக்கத்தவனுக்கு போலீஸ் வேலை, வக்கத்தவனுக்கு வாத்தியார் வேலை

விளக்கம்: இந்த பழமொழியின் அர்த்தம், போக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு போலீஸ் வேலை. வாக்கு கற்றவனுக்கு அல்லது கற்று கொடுப்பவனுக்கு வாத்தியார் வேலை என்பதாகும்.

9. ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.

விளக்கம்: இதன் அர்த்தம், ஒருவனின் மனைவி கர்ப்பமாக இருக்கும் போது (என்னதான் அவன் மனைவியாக இருந்தாலும் அவள் இன்னொருவன் அதாவது ஊரான் பிள்ளைதானே) அவளை நன்றாக கவனித்து கொண்டால் , அவளின் வயிற்றில் வளரும் தன்பிள்ளை தானாக வளரும் என்பதாகும்.

10. சேலை கட்டிய மாதரை நம்பாதே

விளக்கம்: சேல் அகட்டிய மாதரை நம்பாதே என்பது தான் அதன் உண்மை பொருள். சேல் என்றால் கண். தன் கணவனுடன் இருக்கும்போது கண்களை அகட்டி வேறு ஒரு ஆடவனை பார்க்கும் பெண்களை நம்பாதே என்பது தான் உண்மை பொருள்.

11. மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்காதே.

விளக்கம்: மண் குதிரை நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை. அதாவது ஆற்றுப்படுகைகளில் மண் குதிர்கள் இருக்கும். அவற்றில் கால் வைத்தால் கால்கள் உள்ளே பதியும். அந்த மண் குதிரை (குதிர் ஐ) நம்பி ஆற்றில் இறங்காதே என்பது தான் உண்மை.

Posted by: Challaram

1 comment:

  1. If you are a dog lover then this movie is for you
    Download Arctic Dogs (2019) Full Movie in mp4 HD Qaulity 👇
    Download Arctic Dogs (2019) Full Movie in mp4 HD Qaulity

    Follow my social networks for funny memes and odd news

    Facebook page 👇
    follow Facebook page
    Twitter👇
    Join Twitter
    Telegram👇
    Join Telegram

    ReplyDelete